சொல்லாய்வுகள்

பாசறை

பாசறை என்பது அரசனும் படைகளும் போர்செய்வதற்காகச் சென்று தங்குவது என்பது யாவரும் அறிந்ததே.  அது பாசு + அறை என்னும் இரு சொற்களின் கூட்டாகும். பாசு என்பதற்குப் பசுமை எனத் திவாகர நிகண்டும், மூங்கில் எனச் சூடாமணி நிகண்டும் பொருள் தருகின்றன.  அதாவது பசுமை என்பது மூங்கிலுக்கு ஆகுபெயராக வழங்கி இருக்கின்றது. மூங்கிலால் தடுத்துக் கட்டப்பட்ட அறை தான் பாசறை. இதற்கு நிகரான கட்டூர் என்பதும் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.

ஆமாம்

எதற்கு எடுத்தாலும் ‘‘ஆமாஞ்சாமி” போடுபவர்கள் உண்டு. அதென்ன ஆமாம்? ஆம் + ஆம் =ஆமாம். ஆம் என்பது ஆகும் என்பதன் இடைக்குறை. ”ஆகும் ஆகும்” என இரட்டித்துச் சொல்வதற்குப் பதிலாக ஆமாம் என்கிறோம். தமிழின் மிகச்சிறிய அடுக்குத்தொடர்களுள் இதுவும்ன்று.

வானரம்

வானரம் என்றால் குரங்கு என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அஃது ஒரு தொகைச்சொல் என்பது தெரியுமா? வால் + நரம் = வானரம். அதாவது வாலை உடைய மனிதன் என்பது பொருள். மனிதனுக்கும் குரங்கிற்குமான இனவியல் தொடர்பு பற்றி டார்வின் மாதிரி நம்மவர்கள் முழுமையான ஆய்வு செய்தார்களா என்று  தெரியாது. ஆனால் புறத்தோற்றத்தை வைத்துப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒரு சொல்லாக்கத்தைச் செய்திருக்கிறார்கள். தொல்காப்பிய மரபியல் நூற்பா ஒன்றுக்கு உரையெழுதிய பேராசிரியர், மனவுணர்வு மிக்க குரங்கு போன்றனவும் ஆறறிவு உயிர்களில் சேர்க்கத் தகுந்தவை எனக் குறிப்பிடுகின்றார்.

வைக்கோல்

கால்நடைத் தீவனங்களில் பழமையானது வைக்கோல். மரபுவழி வேளாண்மையில் நெல்லின் காய்ந்த நூறினைப் பதப்படுத்தி ஆண்டு முழுவதும் மாட்டுக்கு தீனியாகக் கொடுப்பர். “ அடி காட்டுக்கு; நடு மாட்டுக்கு; நுனி வீட்டுக்கு ” என்பது பழமொழி. இது, வை + கோல் = வைக்கோல் என இரு சொற்களின் புணர்ச்சியாகும். வை-கூர்மை; கோல் – குச்சி அல்லது தூறு. அதாவது பயிரை அறுவடைக்குப் பின்னர் எஞ்சும் கூர்மையான குச்சி அல்லது தூறு.

மாத்தூர்

தமிழ் நாட்டின் பல பகுதிகளில் மாத்தூர் என்னும் பெயரில் ஊர்கள் காணப்படுகின்றன. இது மாற்று + ஊர் = மாற்றூர் என்பதன் மரூஉ. அதாவது வெள்ளம், தீ போன்ற இயற்கைக் காரணங்களுக்காகவும் வேறு பல செயற்கைக் காரணமாகவும் ஓர் ஊர் மாற்றோர் இடத்திற்கு மாற்றப்படுவது உண்டு. இம்மாற்றம் சில / பல ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு. பல இடங்களில் அருகருகே புதுமாத்தூர், பழைய மாத்தூர் என வழங்கப்படும் மரபும் காணப்படுகின்றது. இவை இடப்பெயர்வு குறித்த ஆய்விற்கான களமாகும். எப்படியாயினும், மாற்றூர் ~ மாத்தூர் ஆவது மொழி இயல்பு. நாற்றம் ~ நாத்தம்;குற்றம் ~ குத்தம் என்னும் மாற்றங்களை ஒப்பு நோக்குக. இவ்வகை மாற்றத்தை மொழியியலில் பல்லினமாதல் (Dentalization) என்பர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக