வெள்ளி, 3 மார்ச், 2017
மாத்தூர்
வைக்கோல்
கால்நடைத் தீவனங்களில் பழமையானது வைக்கோல். மரபுவழி வேளாண்மையில் நெல்லின் காய்ந்த நூறினைப் பதப்படுத்தி ஆண்டு முழுவதும் மாட்டுக்கு தீனியாகக் கொடுப்பர். “ அடி காட்டுக்கு; நடு மாட்டுக்கு; நுனி வீட்டுக்கு ” என்பது பழமொழி. இது, வை + கோல் = வைக்கோல் என இரு சொற்களின் புணர்ச்சியாகும். வை-கூர்மை; கோல் – குச்சி அல்லது தூறு. அதாவது பயிரை அறுவடைக்குப் பின்னர் எஞ்சும் கூர்மையான குச்சி அல்லது தூறு.
வானரம்
வானரம் என்றால் குரங்கு என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அஃது ஒரு தொகைச்சொல் என்பது தெரியுமா? வால் + நரம் = வானரம். அதாவது வாலை உடைய மனிதன் என்பது பொருள். மனிதனுக்கும் குரங்கிற்குமான இனவியல் தொடர்பு பற்றி டார்வின் மாதிரி நம்மவர்கள் முழுமையான ஆய்வு செய்தார்களா என்று தெரியாது. ஆனால் புறத்தோற்றத்தை வைத்துப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒரு சொல்லாக்கத்தைச் செய்திருக்கிறார்கள். தொல்காப்பிய மரபியல் நூற்பா ஒன்றுக்கு உரையெழுதிய பேராசிரியர், மனவுணர்வு மிக்க குரங்கு போன்றனவும் ஆறறிவு உயிர்களில் சேர்க்கத் தகுந்தவை எனக் குறிப்பிடுகின்றார்.
ஆமாம்
எதற்கு எடுத்தாலும் ‘‘ஆமாஞ்சாமி”
போடுபவர்கள் உண்டு. அதென்ன ஆமாம்? ஆம் + ஆம் =ஆமாம். ஆம் என்பது ஆகும் என்பதன் இடைக்குறை.
”ஆகும் ஆகும்” என இரட்டித்துச் சொல்வதற்குப் பதிலாக ஆமாம் என்கிறோம். தமிழின்
மிகச்சிறிய அடுக்குத்தொடர்களுள் இதுவும் ஒன்று.
பாசறை
பாசறை என்பது அரசனும் படைகளும் போர்செய்வதற்காகச் சென்று தங்குவது என்பது யாவரும் அறிந்ததே. அது பாசு + அறை என்னும் இரு சொற்களின் கூட்டாகும். பாசு என்பதற்குப் பசுமை எனத் திவாகர நிகண்டும், மூங்கில் எனச் சூடாமணி நிகண்டும் பொருள் தருகின்றன. அதாவது பசுமை என்பது மூங்கிலுக்கு ஆகுபெயராக வழங்கி இருக்கின்றது. மூங்கிலால் தடுத்துக் கட்டப்பட்ட அறை தான் பாசறை. இதற்கு நிகரான கட்டூர் என்பதும் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.
சனி, 25 பிப்ரவரி, 2017
அறிமுகம்
தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.
மொழி – மனித சமூகத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு. ஆதி மனிதர்களிடம் உழைப்புத்
தோன்றிய பொழுதே மொழியும் உடன்தோன்றியதெனக் கூறப்படுகிறது. உலகில் மனித இனம் நிலைபெற்றிருக்கப்
பொருள் உற்பத்தி எந்த அளவிற்கு அடிப்படிடையோ அதே அளவிற்கு மொழியும் இன்றியமையாதது.
இது மானுடத்திற்கான காற்றாகவும் களஞ்சியமாகவும் விளங்குகின்றது. பாமரர்கள் நாவிலும்
பண்டிதர்கள் பாவிலும் அளவிலா ஆனந்தக் கூத்தாடும் மொழியை இறுகப் பிடித்து இனம்பிரித்து
ஆராய்வது இயலாத ஒன்றுதான். இருந்தும் பொழுதுபோக்க, புலன்மகிழ என்னதான் செய்வது? வலைப்பூவில்
வழிதேட வந்திருக்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)