கட்டுரைகள்

ரெழுபது : உள்ளும் புறமும் 

‘இலக்கியம் காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி’ என வருணிக்கப்படுவதுண்டு. கண்ணாடி, எந்தக் கோணத்திலிருந்து பிடிக்கப்படுகிறதோ அதற்கு ஏற்பவே பிம்பத்தைக் காட்டும். மேலும், கண்ணாடியால் எல்லாவற்றையும் பிரதிபலிக்க முடியாது. சான்றாக, ஓர் இடத்தில் நிலவும் தட்பவெட்ப நிலையைக் கண்ணாடியால் துல்லியமாகக் காட்ட முடியாது.  அது போலத்தான் இலக்கியமும். அதாவது எந்த நோக்குநிலையில் இருந்து செய்யப்படுகிறதோ அந்தச் சார்பியல்பைக் பெற்றுத்தான் இலக்கியம் உரு கொள்கிறது. தாம் தோன்றிய கால கட்டத்தின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் இலக்கியங்கள் வெளிப்படையாக எடுத்துரைத்துவிடுவதில்லை. சில செய்திகளை இலக்கியங்கள் பூடகமாகப் பேசுகின்றன; சிலவற்றைப் பற்றிப் பேசாமல் மௌனம் காக்கின்றன; சிலவற்றைத் திரித்து வேறுபடுத்திக் கூறுகின்றன. ஆக, ஓர் இலக்கியத்தின் நுவல்பொருளை அது தோன்றிய காலச் சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய தேவை அறியலாகிறது. அதனடிப்படையில் இங்கு ஏரெழுபது என்னும் நூல் ஆய்விற்கு உட்படுத்தப்படுகிறது.

1.0 ஏரெழுபது - அறுபத்தொன்பது - எழுபத்தொன்பது

            ஏரெழுபதின் ஆசிரியராகக் கம்பர் சுட்டப்படுகின்றார். இவர் இராமாயணத்தை எழுதிய கம்பரினும் வேறானவர்; பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் என மு.அருணாசலம்(1909-1992) குறிப்பிடுகின்றார்(2005:தொகுதி–6,287). ஏரெழுபது என்னும் நூற்பெயரிலேயே பாடல் எண்ணிக்கை இடம்பெற்றுள்ளது. நூலின் தொடக்கமான கணபதி வணக்கப் பாடலுள்ளும், கருவி எழுபதும் உரைக்க (ஏர்.பாயிரம் 1:1) என்னும் குறிப்புக் காணப்படுகின்றது. ஆனால், நூலின் அமைப்பைப் பார்க்கும்பொழுது முகப்புப்பகுதியில் பத்துப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவை கணபதி வணக்கம், மும்மூர்த்தி வணக்கம், கலைமகள் வணக்கம், சோழமண்டலத்தின் சிறப்பு, சோழ மன்னனின் சிறப்பு, வேளாளர்களின் குடிச்சிறப்பு உள்ளிட்ட செய்திகளை விளம்புகின்றன. அவற்றைத் தொடர்ந்நு உழவுத்தொழிலிற்குரிய கருவிகளும் செய்கைகளும் அறுபத்தொன்பது பாடல்களில் விளக்கப்படுகின்றன. ஆக, நூலின் தரவுகள் மட்டும் அறுபத்தொன்பது(69) பாடல்களாகவும், கடவுள்  வணக்கம் முதலான பாயிரப்பகுதியோடு சேர்த்துக் கணக்கிடும்பொழுது எழுபத்தொன்பது(79) பாடல்களாகவும் அமைகின்றன. இவ்வமைப்பு, ஆறுமுக நாவலர் பதிப்புத் தொடங்கிச் சீதை பதிப்பக வெளியீடுவரை காணப்படுகின்றது. இத்தகைய எண்ணிக்கைச் சிக்கல் ஏரெழுபதிற்கு மட்டுமன்று; சிலை எழுபது, ஈட்டி எழுபது போன்ற நூல்களிலும் காணப்படுகின்றது. சிலை எழுபதில் பாயிரப் பாடல்கள் எட்டும்(8), நூலின் பாடல்கள் எழுபத்தொன்றும்(71) உள்ளன. மொத்த எண்ணிக்கை எழுபத்தொன்பதாக(79) அமைகின்றது. ஈட்டி எழுபதில் கடவுள் வாழ்த்து, பாயிரம், நூல் ஆகிய யாவும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக எழுபத்தொரு(71) பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆக, இந்நூல்களில் பல இடைச்செருகல்கள் உள்ளமை புலனாகிறது.

            ஏரெழுபதின் பாயிரப்பகுதிக்கும் நூற்பகுதிக்கும் இடையில் குறிப்பிடத்தக்க இடைவெளி / முரண்பாடுகள் உள்ளனவா? என்று ஆராய்ந்தபொழுது ஒரு செய்தி கிட்டியது. ஏரெழுபதின் நூற்பகுதிக்குள் வேளாளர்களின் பெருமைகள் சிறப்பித்துப் பேசப்படுகின்றன. அங்கெல்லாம் காராளர் (ஏர்.பாயிரம்1:1,2:2,10:3,நூல்1:3,6:4,18:1,38:4,39:4,41:2,44:1,49:3,50:3,51:4,53:4, 56:4,64:3), பெருக்காளர் (ஏர்.பாயிரம்7:3,9:2; நூல்2:2,4:3,8:2,9:3,10:3,15:4,21:3, 27:3,31:3, 62:1,63:3,65:4,67:2,68:2,69:3), வேளாளர் (ஏர்.13:1,22:3,25:1,29:3, 32:4,35:3,40:4,61:1), உழவர் (ஏர்.20:4,42:3,60:3), உழுபகடு பூட்டுவார் (ஏர்.16:1,2), உழுதுண்டு வாழ்வார் (ஏர்.19:1), உழுங்குலம் (ஏர்.பாயிரம்8:4), தாடாளர் (ஏர்.57:3), திருவாளர் (ஏர்.37:4), ஏர்வேந்தர் (ஏர்.58:2,4), மேழித்தேவர் (ஏர்.பாயிரம்7:4), நிலமடந்தை திருமக்கள் (ஏர்.52:2), புவிமடந்தை திருமைந்தர்(ஏர்.23:3), பொன்னியுறைநாடர் (ஏர்.47:3), குலப்பொன்னித் திருநாடர் (ஏர்.26:2,30:2,52:1), செழும்பொன்னித் திருநாடர் (ஏர்.7:3,56:3), சொரிபொன்னித் திருநாடர் (45:2), வளர்பொன்னித் திருநாடர் (66:3), பொன்னி வளநாடர் (ஏர்.3:3), காவேரி வளநாடர் (5:3,8:3,12:3,17:3) ஆகிய தொடர்களால் அவர்கள் குறிக்கப்படுகின்றனர். பாயிரப்பகுதியில் தனித்துவமாக, கங்கைபெறும் காராளர் (ஏர்.பாயிரம்1:1), கங்கைகுலாதிபர் (ஏர்.பாயிரம்3:2) என்னும் தொடர்களால் வேளாளர்கள் குறிக்கப்படுகின்றனர். அதாவது, கங்கையின் குலமரபிலிருந்து பிறந்து வந்தவர்களே வேளாளர்கள் என்பது கருத்தாகின்றது. வேளாளர்கள், சிவபெருமானுக்கும் கங்காதேவிக்கும் பிறந்த மரபினர் என வழங்கப்படும் புராணச் செய்தியை ஆ.சிங்காரவேலு முதலியார் (1855-1931) தமது அபிதான சிந்தாமணி (ஸ்ரீமுக தைத்திங்கள்:1517) என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். மேலும்,  வேளாளர்களுக்கான தசாங்கத்தில், கங்கை ஆறே அவர்களுக்குரியதாகச் சுட்டப்படுவதையும் எடுத்துரைக்கின்றார் (மேலது).
 
            ஏரெழுபது என்னும் நூல், முழுவதும் காவிரிப்படுகையில் நிகழும் உழவுத்தொழிலைப் பற்றியே பேசுகின்றது. அதனுள் கங்கை பற்றிய செய்திகள், எந்த இடத்திலும் இடம்பெறவில்லை. ஆனால், பாயிரப்பகுதியில் மட்டும் வேளாளர்கள், கங்கைகுலாதிபர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழக நிலப்பகுதிகளில் உழவுத்தொழில் நடைபெற்று வருகின்றது. அதனை மரபாகச் செய்துவரும் பெருங்கூட்டம் இங்கு இருக்கின்றது. ஆனால், கங்கைப்பகுதியில் இருந்துதான் வேளாளர்கள், பிற பகுதிகளுக்குச் சென்றனர் எனக் குறிப்பிடுவதாக மேற்கண்ட பாயிரப்பகுதி அமைகின்றது.இது முரண்பாடாகத் தெரிகின்றது. பின்னாட்களில், வேளாளர்களின் வரலாற்றை எழுதிய மறைமலை அடிகள்(1876-1950) தென்னாட்டில் இருந்துதான் வேளாளர்கள் வடஇந்தியப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து சென்றதாகக் குறிப்பிடுகின்றார்(1997:57). இக்கருத்தும் மேல்விவாதத்திற்குரியது. ஏனெனில், உழவுத்தொழில் முதன்முதலில் எந்த ஆற்றங்கரையில் தோன்றிப் பரவியது என்பது குறித்த திட்டவட்டமான ஆய்வுகள் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. வந்துள்ள ஆய்வுகளுக்கு ஊடே பல கருத்துமுரண்பாடுகள் நிலவுகின்றன. ஏரெழுபதின் பாயிரப்பகுதிக்கும் அதன் நூற்பகுதிக்கும் இடையிலான கருத்து இடைவெளியைச் சுட்ட மேற்கண்ட செய்தி இங்கு எடுத்துரைக்கப்பட்டது.


2.0 பாடுபொருள் அமைப்பு

ஏரெழுபது என்னும் நூல், உழவுத்தொழிலின் பல்வேறு படிநிலைகளையும் உழவுக்கருவிகளையும் விளக்குவதோடு, உழவுத்தொழிலுடன் தொடர்புடைய வேளாளர்கள் பற்றியும் மிகுதியாகப் பேசுகின்றது. குறிப்பாக, வேளாளர்களின் குலப்பெருமை, இயல்பு, கொடைத்தன்மை போன்றவை விதந்துரைக்கப்படுகின்றன. வேளாளர்களின் சிறப்பு, தனிநிலையில் வைத்து விளக்கப்படாமல், பிராமணர், வேந்தர் போன்றோருடன் பெருமளவு ஒப்பிட்டுப் பேசப்படுகிறது. அதற்குரிய சான்றுகள் சில வருமாறு.

வாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும்
ஆழியால் உலகளக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும்
ஊழிபே ரினும்பெயரா உரையுடைய பெருக்காளர்
மேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே (ஏர்.4)


ஓதுவா ரெல்லாரும் உழுவார்தங் தலைக்கடைக்கே (ஏர்.11:2)

ஞானமறை யவர்வேள்வி நலம்பெறுவ தெவராலே  (ஏர்.14:2)
அலகிலா மறைவிளங்கும் அந்தணரா குதிவிளங்கும்….
உலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே (ஏர்.20)

          பழுதுசால் வகையறியாப் பழமறையோர் பெருவேள்விக்
குழுதுசால் வதுகலப்பை யுயர்வானது (ஏர்.21:1-2)

        கலையிட்ட மறைவேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்…
         நிலையிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே (ஏர்.40)

ஏரெழுபதின் நூற்பகுதியில் அமைந்துள்ள அறுபத்தொன்பது(69) பாடல்களில் வேளாளர்களின் சிறப்பு, பிராமணர் அல்லது வேந்தர் அல்லது அவ்விருவருடனும் சேர்த்து ஒப்பிடப்படும் இடங்களின் மொத்த எண்ணிக்கை நாற்பதாகும்(40). அதாவது, அறுபது விழுக்காட்டுப் பாடல்களில் வேளாளரின் பெருமை, பிராமணர்களுடனும் அரசருடனும் ஒப்பிட்டு உயர்வாகப் பேசப்படுகின்றது. சிலை எழுபது (ஏழு பாடல்கள்-9.86 விழுக்காடு), ஈட்டி எழுபது (ஒரு பாடல்-1.4 விழுக்காடு) ஆகிய நூல்களில் பிராமணர், வேந்தர் பற்றிய ஒப்பீடுகள் மிகமிகக் குறைவு. ஈட்டி எழுபதில் அமைந்துள்ள மங்கல வாழ்த்துப் பாடலில் மட்டும் அவர்கள் வாழ்த்தப்பட்டுள்ளனர். பிற இடங்களில் அவர்களைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
 
பிராமணர்களின் தொழிலை விட, வேளாளர்களின் தொழில் மேலானது என்னும் கருத்து ஏரெழுபதுள் பல இடங்களில் அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வருணாசிரமச் சிந்தனை கூர்மைபட்டிருந்த சோழர் காலத்தில் ஏரெழுபதுள் பதிவுசெய்யப்பட்டுள்ள இக்கருத்தை எப்படிப் புரிந்துகொள்வது?  அதற்குரிய நேரடியான / முழுமையான பதிலை ஏரெழுபதிற்குள் இருந்து பெறமுடியாத நிலையில் அக்காலச் சமூக மற்றும் அரசியல் பொருளாதாரச் சூழ்நிலைகளை ஆராய வேண்டிய தேவை எழுகின்றது.


3.0 பிராமணர்களுக்கான வேலையும் வெகுமதியும்

            வேளாளர்களின் தொழில், பிராமணர்களின் தொழிலை விட மேலானது என உரைக்கப்படுவதால், தமிழகப் பகுதிகளில் பழங்காலந்தொட்டுப் பிராமணர்கள் செய்துவரும்  அடிப்படைத்தொழில், அதற்கீடாகப் பெற்ற ஊதியம் போன்றவற்றைப் பற்றி அறிய வேண்டியதாகிறது.  சங்க இலக்கியத் தொகுப்புகளுக்கு உள்ளேயே பிராமணர்களைக் குறித்த செய்திகள் பரவலாகக் காணப்படுகின்றன. அவற்றுள் வேதம் ஓதுதலும் வேள்வி செய்தலும் பிராமணர்களுக்குரிய முதன்மைத்தொழில்களாகச் சுட்டப்படுகின்றன (பதி.24:6-8,70:18,74:2; மது.494,655-656;முருகு.96,பெரும்.316,கலி.119:12-13,36:26,அகம்.13:11,புறம்.15:20, 166:22, 224:9,397:20-21,400:19).


            பிராமணர்கள், நான்மறைக்குரியோர்கள், வேதியர்கள் என்னும் கருத்தாக்கமும் (ஏர்.பாயிரம் 10:1; நூல்4:1,11:2,14:2,20:1,21:1,23:1,28:3,33:3,34:1,37:1,38:1,40:1,42:1, 50:1, 64:1,67:3) வேள்வி செய்வதற்குரியோர் என்னும் செய்தியும் (ஏர்.பாயிரம் 3:3;  நூல் 4:1,14:2,20:1,21:1-2, 47:1) மீண்டும் மீண்டும் ஏரெழுபதில் வலியுறுத்தப்படுகின்றன.

நால்வருணக் கடமைகளைக் கூறுமிடத்து,

அந்தணர் வேதம் ஓதியும், ஓதுவித்தும், தியாக வேள்விகள் புரிந்தும், புரிவித்தும்,    

செல்வராயின் பிறர்க்கு ஈந்தும்,வறிஞராயின் செல்வரிடம் ஏற்றும் வாழத் தக்கவராயினர்.

என மனுதர்ம சாஸ்திரம்(1:88) குறிப்பிடுகிறது. இதே கருத்து, பதிற்றுப்பத்தின் இருபத்து நான்காம்(24) பாடலிலும், தொல்காப்பியப் புறத்திணையியலின் பதினாறாம்(16) நூற்பாவிற்கு இளம்பூரணர் எழுதிய உரையிலும் எதிரொலிக்கிறது.

பிராமணர்களுக்குரிய அடிப்படைத்தொழிலைப் பற்றிப் பேசுமிடத்து, உழவுத்தொழில் குறித்த அவர்களின் கண்ணோட்டத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது.

பயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனர்.ஆயினும் பெரியோர் அதைப் பாராட்டவில்லை. ஏனெனில் இரும்புக்கொழு நுனியுடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைக் கொண்டு  பூமியையும்,பூமியில் வாழும் சிறிய உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ!
என்னும் மனுதர்ம சாஸ்திர ஸ்லோகம்(10:84) உழவுத்தொழிலைப் பாவத்திற்குரியதாகக் கருதும் பிராமண மனநிலையை எடுத்துரைக்கின்றது. ஆனால், பிறரைத் தனக்காக உழச்செய்து அதன்
விளைச்சலை மட்டும் துய்ப்பதில் தவறில்லை என்பதை,
பிராமண க்ஷத்திரியர்கள் வாணிபம் செய்து பிழைத்தபோதும்,உடல் முயற்சியும் பிறர் தயவை நாடத் தக்கதாயுமுள்ள விவசாயத் தொழிலை மேற்கொள்ளக் கூடாது.அதை, தான் நேரில் இயற்றாவிடினும்,தனது ஜீவனத்தை முன்னிட்டு,தக்க ஆட்களைக் கொண்டு தனக்காக  விவசாயமும் செய்விக்கலாம் (மனு.10:83)
என்னும் மற்றொரு ஸ்லோகம் குறிப்பிடுகிறது.  ஆக, உழவுத்தொழிலில் பிராமணர்கள் நேரடியாக ஈடுபடக்கூடாது என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இனி, வேதம் ஓதுதல், வேள்வி செய்தல் முதலான பணிகளுக்குப் பிராமணர்கள் பெற்ற ஊதியம் குறித்து ஆராய வேண்டியுள்ளது.
 பழங்கால அரசவைகளில் வேள்வித்தொழில் புரிந்த பிராமணர்களுக்குப் பொன்னை ஊதியமாகக் கொடுத்தல் பெருவழக்காக இருந்துள்ளது. அதுவே கையோடு முடிந்துகொண்டு இடம்பெயர்ந்து போவதற்கு வசதியானதாக இருந்துள்ளது. ஏனெனில், அன்று பிராமணர்கள் ஒரே ஊரில் நிலையாகத் தங்கி இருப்பது பெருவழக்கில்லை. வேளாண் உற்பத்திப்பெருக்கமும் கற்றளிகளும் உண்டான பிறகே பிராமணர்கள் ஓருரை நம்பி வாழத் தலைப்பட்டனர்.
 
பிராமணர்கள் பொன்னைப் பரிசாகப் பெறுவதிலேயே பல சடங்கியல்களை ஏற்படுத்தி வைத்திருந்தனர்.அவற்றுள், துலாபாரம்  (அரசன்,தன் எடைக்கு எடை பொன்னைப் பிராமணர்க்கு  வழங்குதல்), இரணியகருப்ப தானம் (பொன்னால் ஒரு பசுவைச் செய்து, அதன் வயிற்றுக்குள் அரசன் புகுந்துவந்து, பின்னதனைப் பிராமணர்க்குக் கொடுத்து விடுவது) போன்றவற்றைக் குறிப்பிடத்தக்கனவாக கோ.கேசவன்(1946-1998) கூறுகின்றார்(2001:143). இதனால், பழங்காலத்தில் பிராமணர்களின் கவனம் நிலக்கொடையின் மீது குவியவில்லை என அறியமுடிகிறது. பாசன வசதிகள் பெருக்கடையாத காலத்தில் நில வருவாயைவிடப் பொன்னின் மதிப்புக் கூடுதலாக இருந்ததால் நிலத்தை அவர்கள் பெரிதும் விரும்பவில்லை. ஆயினும், பிராமணர்களுக்கான நிலக்கொடை பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் மிகச் சில இடங்களில் (புறம்.297,330) காணப்படுகின்றன  (மேலது 134).

4.0 தமிழக நிலமானிய முறையின் போக்குகள்

            அரசுருவாக்கக் காலத்தில் நிலத்தைக் கையகப்படுத்துவதே முதன்மையான பணியாக இருந்துள்ளது. அன்றைய உற்பத்திக்குரிய அடிப்படைக்காரணியாக நிலமே விளங்கி யிருக்கிறது. தமது நாட்டின் நிலத்தையும் பகைவர்களிடமிருந்து கைப்பற்றிய நிலத்தையும் வருவாயுடையதாக மாற்றிக்கொள்வதே அன்றைய வேந்தர்களின் நோக்கமாக இருந்துள்ளது. அதனால், பண்படாத நிலத்தைத் திருத்திச் செப்பனிடுவதற்கும் உடலுழைப்பைச் செலுத்தி உற்பத்தியைப் பெருக்குவதற்கும் வலுவுள்ள மக்களுக்கு நிலங்கள் கொடையாக வழங்கப்பட்டன.  அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை வரியாகப் பெற்றுக்கொள்வது அரசர்களின் உரிமையாக நிலைநிறுத்தப்பட்டது. இருக்கும் நிலத்தை வேற்றுநாட்டினரிடம் இழக்காமலும், வேற்றுநாட்டினர் நிலத்தை அடித்துப் பிடுங்குவதற்கும் போரின்பொழுது உழுகுடிகள், படைவீரர்களாக அணிதிரட்டப்பட்டனர். வெற்றிகளின்போது கிடைக்கும் கொள்ளைப்பொருட்களிலும் நிலங்களிலும் வீரர்கள்/உழுகுடிகள் பங்குதாரர்களாக இருப்பர். அந்நிகழ்வுகளைத் தலைமையேற்று நிருவகிக்கும் பொறுப்பை அரசர்கள் செய்துவந்தனர். அரசுகள் விரிவடையும்பொழுது (பேரரசுகளாக மாறும்பொழுது) போர்வீரர்கள் மட்டுமின்றி வேறுசில தொழில்பிரிவினர்களுக்கும் நிலங்களைக் கூறிட்டுக் கொடுக்கும் பழக்கம் தோன்றியது. அவ்வாறு கொடுத்து அரசாளும்முறையே நிலமானிய முறை (Feudal Order) என க.கைலாசபதி(1933-1982) குறிப்பிடுகிறார்(1999:131,132). அன்று நிலவிய உற்பத்திமுறை சிதையாமல் பாதுகாக்கப்படுவதற்கும், மக்களிடம் எதிர்ப்பலைகள் எழாமல் இருப்பதற்கும் பல கருத்தியல்களை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது. அதனைச் செய்துமுடிப்பதற்குப் பார்ப்பனர்கள் பயன்பட்டனர். அச்செய்கைக்கு ஈடாக அன்று பொருளியல் மதிப்பு மிக்கதாக இருந்த நன்செய் நிலங்கள் அவர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்டன. அவ்வாறு பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் பிரம்மதேயம் என அழைக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் இவ்வழக்கம் ஏற்பட்ட பின்னணியை,

குப்தர் ஆட்சிக்குப் பிற்காலத்தில் பிராம்மணர் நிலை மேன்மையடைந்தது. அக்காலத்தில்  பௌத்தம் செல்வாக்கிழந்தது. பொருளாதார அடிப்படையும் அரசியல் அதிகாரத்தை  நிலைப்படுத்திக்கொள்ள பிராம்மணரது கல்வியின் இன்றியமையாமையும் பிராம்மணரின் சமய ஆதிக்கத்திற்கு வழிவகுத்தன. இக்காலத்தில் பிராம்மணருக்கு நிலங்களும்,  நில வருவாயும் தானமாக அளிப்பது அதிகரித்தது. அரசனது அதிகாரியாகப் பதவி வகிப்பதற்காகவோ,  அரசர்க்கு ஊழியம் புரிந்ததற்காகவோ சம்பளத்திற்குப் பதில்  பிராம்மணருக்கு நிலம் அளிக்கப்பட்டது. இவை தவிர அக்ரஹாரம் என்றும், பிரம்மதேயம் என்றும் நிலங்களும், கிராமங்களும் பரம்பரை உரிமையோடு பிராம்மணர்களுக்குத்  தானமாக வழங்கப்பட்டன. கல்வியை மதித்தோ, சமயப் பணிகள் செய்வதற்கு ஊதியமாகவோ, அரசப் பரம்பரையின் கொடிவழிப் பட்டியலை எழுதுவதற்காகவோ, இத்தானங்கள் அளிப்பட்டன. இவற்றால் பிராம்மணருடைய வருமானமும், சமூக நிலையும் உயர்ந்தன. நிலத்தோடு எண்ணற்ற உரிமைகளும் அவர்களுக்கு(க்) கிடைத்தன.

என ரொமிலா தாப்பர்(1931) விரிவாக எடுத்துரைக்கின்றார்(2008:34). தமிழகத்தைப் பொருத்தவரையில் பிரம்மதேய நிலங்களை வழங்கும்முறை, சங்க கால இறுதியில் தோற்றம் பெற்று, பல்லவர்-பண்டியர் காலத்தில் வளர்ந்து, சோழர் காலத்தில் உச்சநிலையை அடைந்ததாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர் (கோ.கேசவன்,2001:134; தேவ.பேரின்பன் [1952-2013],2006:43; ஏ.கே.காளிமுத்து[1937?-2014],2012:32,33). சோழர் காலத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கும் தொழிற் பிரிவினருக்கும் வழங்கப்பட்ட நிலங்களுக்குரிய சில பெயர் விளக்க அட்டவணை வருமாறு (கோ.கேசவன்,2001:132-137; ஆ.ஜெகதீசன்[1972],2007:132).


வ.எண்
நிலக்கொடை
பெயரீடு
1.
வேளாளர்
வெள்ளான் வகை
    2.
பிராமணர்
பிரம்மதேயம்,அகரம்,சதுர்வேதிமங்கலம்
    3.
சிவன்கோயில்
தேவதானம்
    4.
திருமால் கோயில்
திருவிடையாட்டம்
    5.
சமண,பௌத்தப் பள்ளி
பள்ளிச்சந்தம்
    6.
மடம்
மடப்புறம்
    7.
அறச்செயல்கள்
சாலாபோகம்
    8.
நவகண்டம்
தொறுப்பட்டி
    9.
கணக்கர்
கணக்கக்காணி
   10.
போரில் மடிந்தோர்
உதிரப்பட்டி,ரத்தக்குடங்கை
   11.
படைத்தலைவர்
படைப்பற்று,வன்னியப்பற்று
   12.
மருத்துவர்
வைத்தியபோகம்
   13.
தச்சர்
தச்சக்காணி
   14.
பாணர்
பாணக்காணி
   15.
கூத்துக்கலைஞர்
சாக்கைக்காணி,கூத்தாட்டிக்காணி
 

5.0 ஆற்றுப்படுகை உற்பத்தியும் கோயில் நிருவாகமும்

            தமிழக வரலாற்றில் காவிரிப்படுகை, தனித்துவமான கவனத்திற்குரியது. பிற வட்டாரங்களை விட, மிகுதியான நன்செய்ப் பகுதிகளை அது தன்னகத்தே கொண்டது ; சோழப் பேரரசின் மையமாகத் திகழ்ந்தது. அங்குப் பாசன வசதிகள் ஒழுங்கமைக்கப்பட்ட பிறகு,  பயிரிடப்படாமல் கிடந்த தரிசு நிலங்கள், உற்பத்திக்குரியனவாக மாறின. நிலங்கள் துல்லியமாக அளக்கப்பட்டு வகைப்பிரிக்கப்பட்டன. ஊராட்சிமுறை செம்மை செய்யப்பட்டது.மக்களைக் கருத்தியல்முறையில் பணியச் செய்து அரசாள ஏதுவான பெருங்கோயில்கள் கட்டப்பட்டன (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் எழுபது விழுக்காட்டிற்கு மேல் காவிரிப்படுகையில் அமைந்தவை என்பது நினையத்தக்கது). அவற்றின் கண்காணிப்பின் கீழ்  நில உற்பத்திமுறை கொண்டுவரப்பட்டது. பிராமணர்களும் வேளாளர்களும் கோயில்களையும் அவற்றுக்குட்பட்ட நிலவருவாயையும் நிருவகித்து வந்தனர்.அரசனுக்குச் சேர வேண்டிய வரியைப் பெற்றுத் தந்துவிட்டு எஞ்சிய உபரியைத் தாங்களே துய்த்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றிருந்தனர். குறிப்பாக, தேவதான நிலங்கள் பெரும்பாலும் அவ்விருவரின் கூட்டு நிருவாகத்தின் கீழ் இருந்துள்ளன. அவை மட்டுமின்றி இரு பிரிவினரும் தனிப்பட்ட முறையிலும் அரசனிடமிருந்து நிலங்களைப் பெருமளவு கொடையாகப் பெற்றுள்ளனர். ஏரெழுபது என்னும் நூல், சோழ நாட்டுக் காவிரிப்படுகைக்கு உட்பட்ட உழவுத்தொழிலைச் சிறப்பித்துப் பேசுவதாகும். அந்நூலுள் பல இடங்களில் காவிரி (ஏர்.பாயிரம் 4:3;நூல் 5:3,8:3,12:3,17:3,36:3,44;1,69:3), பொன்னி (ஏர்.3:3,7:3,26:2,30:2,45:2,47:3,52:1, 56:3,66;3) என்னும் குறிப்புகள் நேரடியாக இடம்பெற்றுள்ளன. நெற்பயிரின் விளைச்சல் பெருகும்போது சிவபெருமானுடைய விழாக்கள் சிறப்பெய்தும் என்பதை, ஏற்றேறும் அரன் சிறப்புக்கு எழிலேறும் என ஏரெழுபது(47:1) குறிப்பிடுகின்றது.

நீர்வளமிக்க சோழ நாட்டைத் தவிரப் பிற இடங்களில் பார்ப்பனர்களுக்கான நிலக்கொடையும்,  குடியிருப்பும், ஏரெழுபது போன்ற நூலும் தோன்றாமல் போனதற்கு விளக்கம் தருவதைப் போல,

ஆற்றுப்படுகை அல்லாத மேட்டுநிலப்பகுதிகளில் ‘சாதிவர்ணம்’ புதியதாகத் தோன்றிய சாதிகளுக்கு வழங்கப்பட்டது. இங்கு(க்) கோயிலை அடிப்டையாகக் கொண்ட  பிராமணிய உயர்குடி நிர்வாகம் ஏற்படவில்லை. இந்தப் பகுதிகளில் வேளாண் சாதிகளில் கலக சாதிகள்-நிலவுடைமை சாதிகளாக ஆக்கப்பட்டு அவைகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிராம சமூகங்கள் இயங்கின.
என்னும் தேவ.பேரின்பனின் கூற்று அமைகின்றது(2006:45,46). அதாவது,  பாசனவசதி குறைந்த/நிலவருவாய் அதிகமில்லாத இடங்களில் பிராமணர்கள் தங்குவதை விரும்பமாட்டார்கள் எனத் தெரிகின்றது (நிலவருவாயற்ற நாட்டார் தெய்வங்களுக்குப் பிராமணர்கள் பூசாரிகளாகாமல் போனமை இங்கு நினையத்தக்கது).

6.0 வேந்தர்-பிராமணர் கூட்டும் வேளாளர் காழ்ப்பும்

முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்குச் சோழர் காலத்தில்தான் வருணாசிரமமும் சாதியமும் தமிழகத்தில் அழுத்தத்தைப் பெற்றன. அதற்காக வடஇந்தியப் பகுதிகளில் இருந்து பெருந்திரளான பார்ப்பனர்கள் தமிழகத்திற்குக் கொண்டுவந்து குடியமர்த்தப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் (பொ.வேல்சாமி[1951],2010:76; ஏ.கே.காளிமுத்து,2012:32). அவ்வாறு கொண்டுவரப்பட்டோருக்கு வளமான நிலங்கள் கொடையாக வழங்கப்பட்டன. அதற்காக வேளாளர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து நிலங்கள் கைப்பற்றப்பட்டு பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டதையும், அதனால் பிற வகுப்பினருக்குப் பெரும் மனக்கசப்பு ஏற்பட்டதையும் ஏ.கே.காளிமுத்து,

ஏற்கனவே உள்ள வெள்ளான் வகை நிலங்களில் உள்ள பாரம்பரிய நில உடைமையாளர்ளை நீக்கிவிட்டு அவற்றை(ப்) பிரம்மதேயங்களாக மாற்றிய செய்திகளும் உண்டு….இம்மாதிரி(ச்) செயல்கள்,சூத்திரர்களில் முதன்மையாக இருந்த வேளாள  நிலப்பிரபுக்கள் பிராமணர்களைப் பொறாமையுடன் பார்க்கும்படி(ச்) செய்தன.

எனக் குறிப்பிடுகின்றார் (2012: 33,34). பிராமணர்களுக்கு நிலங்களைக் கொடுத்தது மட்டுமின்றி அவற்றைப் பாதுகாப்பதற்கும் சோழ மன்னர்கள் ஏற்பாடு செய்திருந்ததை,

நிலத்தை இழந்த மக்கள் பார்ப்பனர்களிடம் இருந்து நிலத்தைப் பறித்து(த்) தங்கள்

வசப்படுத்திக்கொள்ளாதவாறு ‘ஆணத்தி’ என்ற பதவியை ஏற்படுத்தி அதன்மூலம்

கண்காணிப்பு ஏற்பாடுகளையும் செய்து வைத்தனர்.

என பொ.வேல்சாமி குறிப்பிடுகின்றார்(2010:75). இதனால் நிலமானிய முறையில் வேந்தர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே வலுவான கூட்டணி இருந்ததும், அது வேளாளர்களின் நில மேலாண்மை உரிமையின் மீது ஓர் அதிர்வை ஏற்படுத்தியதும் அறியலாகிறது.

வருணாசிரமத்தைப் பொருத்தவரை அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பதே வரிசைமுறை. அந்த அடிப்படையில் வேளாளர்களின் பெருமை பிற மூவரோடும் ஒப்பிட்டு உரைக்கப்படும் நிலை ஏரெழுபதுள் நான்கு பாடல்களில் மட்டும்தான் (ஏர்.28,37,38,40) காணப்படுகிறது. ஆனால், பிராமணர்களையும் அரசரையும் சேர்த்து (வணிகரைச் சேர்க்காது),
வேளாளர்களுடன் ஒப்பிட்டுப் பேசும் இடங்கள் ஏரெழுபதுள் (4,11,14,20,21, 33,34,42,47,53,64,65,66,67,69) ஏராளமாக உள்ளன. ஆக, தமிழக நிலமானிய முறையில் வணிக வர்க்கத்தை விட, பிராமணர்-அரசர் கூட்டணியே வேளாளர்களுக்குப் பெரிதும் அச்சுறுத்தலாக இருந்திருக்கிறது. அதற்கு நிலமேலாண்மைப் போட்டியே அடிப்படைக் காரணமாக விளங்கியிருக்கிறது.

7.0 பிராமணர் × வேளாளர் : உரசல்களும் உடன்படிக்கைகளும்

 உழவுத்தொழில் குறித்து நேரடியான அனுபவ அறிவு ஏதுமற்ற பிராமணர்கள், தங்களுக்கு இணையாக/மேலாக நில மேலாண்மைப் பொறுப்புகளையும் நிலக்கொடைகளையும் பெற்றுத் திகழ்ந்ததை வேளாளர்கள் பொறாமையுடன் பார்த்தனர். மேலும், வேத அறிவை விட, நில உற்பத்திக்குரிய வேளாண்மை அறிவு மேம்பட்டது என்னும் கருத்தையும் கொண்டிருந்தனர். இதனை,

மெய்ப்பாங்கு படக்கிடந்த வேதநூல் கற்றாலென்…

கைப்பாங்கு பகுந்துநடக் கற்றாரே கற்றாரே

என ஏரெழுபது(34) குறிப்பிடுகின்றது. பிராமணர்களின் குடியேற்றமும் அறிவும் அன்றைய சமூக உற்பத்திக்கு அந்நியப்பட்டு நின்றதை,

எந்த இடமாக இருந்தாலும், பிராமணர்களின் குடியேற்றமே நியாயத்துக்கும் தர்மத்துக்கும் நேர்மைக்கும் மாறாகவே நடத்தப்பட்டிருக்கின்றது. அவர்கள் எந்த ஊரில் குடியேற்றப்பட்டார்களோ, அந்த ஊருக்கும் அவர்களுக்கும் எத்தகைய முன்தொடர்பும்  இருக்கவில்லை. அவர்களுக்கெனத் தரப்பட்ட நிலங்களில் அவர்களுக்கு அதற்கு முன்னர்  எந்த உறவும் இருந்தது கிடையாது. அங்கு வாழ்ந்துகொண்டிருந்த மக்களோடும் அவர்கள் இயைபு கொண்டவர்கள் அல்லர். வந்து குடியேறிய பிராமணர்களுக்கும் வாழ்ந்துகொண்டிருந்த பிறருக்கும் கலாச்சார-பண்பாட்டு-குணநலன்களில் முழுமையான முரண்பாடுகளே இருந்தன. பிராமணர்களுக்கு இருந்ததாகக் கூறப்படும் அறிவு, ஆற்றல், திறமை, நுட்பம் ஆகிய எதுவுமே அன்றைய தேவையான நில உற்பத்திப் பணிகளுக்கோ, அதில் ஈடுபட்டிருந்த மக்களுக்கோ எவ்வகையிலும் பயன்படக் கூடியவையல்ல. புதிதாக வந்து குடியேறிய பிராமணர்கள் நில உற்பத்தி நுட்பம் அறிந்திருந்ததாலேயே குடியேற்றப்பட்டார்கள் என்று எந்த ஆவணமும் குறிப்பிடவில்லை. ஆனால், பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களில் உற்பத்தி செய்துகொண்டிருந்த குடியினரோ, பல தலைமுறைகளாக நில உற்பத்தியில் ஈடுபட்டுப் பட்டறிவும் பயன்பாட்டறிவும் மிக்கவராக விளங்கியவர்கள். மேலும், ஏற்கனவே உழுதொழில் செய்துகொண்டிருந்தவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுத்தான் அந்த நிலங்கள் பிராமணர்களுக்குத் தரப்பட்டன. பெரும்பாலும், நில உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தாலும், அந்த நிலங்களில் முன்னர் உழைப்புச் செலுத்தியவர்களே தொடர்ந்து உழுகுடிகளாக நீடிக்க, உழைப்புப் பயன்களை மட்டும் பிராமணர்கள் எடுத்துக்கொண்டார்கள். இதனால், உள்ளூர் மக்களின் முற்றான பகைமையை முதலாகக் கொண்டே பிராமணர்களின் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன என்பது தெளிவு.

என மே.து.ராசுகுமார் விரிவாக விளக்குகின்றார்  (2004:184,185).

பிராமணர்களுக்கு அரசர்கள் பல்வேறு உரிமைகளைக் கொடுத்துவந்த நிலையில் ஓருரைச் சார்ந்த வேளாளர்கள், சுற்றுவட்டாரத்திலுள்ள மற்ற ஊர்களின் வேளாளர்களோடு சேர்ந்து ‘சித்ரமேழி பெரிய நாடு’ என்னும் அமைப்பை உருவாக்க முயன்றதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர் (ஆ.பத்மாவதி,2003:92;  கோ.கேசவன்,2001:139). இது சோழ வேந்தர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த ‘வளநாடு’ என்னும் நாட்டுப் பிரிவிலிருந்து வேறுபட்டதாகும்.

நில உற்பத்தியிலும் போர்க்களங்களிலும் மட்டும் பங்காற்றினால் பிராமணர்களுக்கு நிகரான மதிப்பைத் தாங்கள் பெறமுடியாது என்பதை உணர்ந்த வேளாளர்கள், சமய அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் முனைப்புக் காட்டத்தொடங்கினர். அதாவது, பிராமணர்கள் பேசும் வேதம், உபநிடதம் போன்றவற்றுக்கு இணையான/மேலான சமூகக் கருத்தியலை உண்டாக்கி மக்களிடத்து அடிமையுணர்ச்சியைப் பெருக்கி, அதன்மூலம் சமூக மேலாண்மையையும் அரசனின் நன்மதிப்பையும் பெற வேண்டிய தேவை வேளாளர்களுக்கு எழுந்தது. அதுதான் அவர்களைச் சிவஞானபோதம் உள்ளிட்ட சைவ சித்தாந்த நூல்களையும்,திருத்தொண்டர் புராணம்  போன்ற இலக்கியங்களையும் படைக்கும்படிச் செய்தது. இது குறித்து விரிவாக க.கைலாசபதி (‘அடியும் முடியும்’, ‘பேரரசும் பெருந்தத்துவமும்’ முதலான கட்டுரைகள்),பொ.வேல்சாமி (‘பார்ப்பனியம் மைனஸ் பார்ப்பனர் = சைவ சித்தாந்தம்’ எனும் கட்டுரை) போன்றோர் ஆராய்ந்துள்ளனர். இவ்வாறு வேளாளர்கள் சமய அதிகாரம் பெறுவதற்கான நூலாக்கங்களையும் மடங்களையும் உருவாக்கத் தொடங்கிய காலத்தில் பார்ப்பனர்கள் தங்கள் எதிர்ப்புணர்ச்சியைக் காட்டத்  தலைப்பட்டுள்ளனர். பார்ப்பனர்கள்,  ஆங்காங்குக் கோயில் சுவர்களை இடித்துத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அச்செயல்களைக் ‘குகையிடிக் கலகங்கள்’ என வரலாற்று ஆய்வாளர்கள் பதிவுசெய்கின்றனர் (பொ.வேல்சாமி,2010:76; ஏ.கே.காளிமுத்து,2012:37).
சோழர் கால இறுதியில் பிராமணர்களுக்கும் வேளாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட உரசல்கள், வரலாற்று நெடுகிலும் தொடர்ந்துவிடவில்லை. ஆளும் வர்க்கத்தின் அங்கங்களான அவர்கள் அடித்துக்கொள்வது, அடிநிலையில் இருப்பவர்களுக்கு எழுச்சியை உண்டாக்கிவிடும் என்பதை உணர்ந்திருந்ததால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் சமரசப்படுத்திக் கொள்ளும் பக்குவத்தைப் பெற்றுக்கொண்டனர். அத்தகைய உடன்பாட்டிற்குக் காரணம், நில மேலாண்மை சார்ந்த உரிமைகளும் பயன்களும் தங்களைவிட்டுப் பறிபோய்விடக் கூடாது என்னும் எச்சரிக்கையுணர்வே ஆகும். சோழர்களுக்குப் பின்வந்த பிற்காலப் பாண்டியர்கள்,  விஜய நகரப்பேரரசு, நாயக்கர், மராட்டியர் காலம் வரை பிராமணர், வேளாளர் கூட்டுறவு தொடர்ந்தது. அது பொருளியல் சார்ந்த ஆதிக்க நலனை அடிப்படையாகக் கொண்டது.  ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு, நில உற்பத்திமுறையில் சில மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர் பிராமணர், வேளாளர்களுக்குள் கனன்றுகொண்டிருந்த நெருப்பு மறுபடியும் பற்றிக் கொண்டது என்பது வேறு கதை. அது முன்னினும் சூடுமிக்கதாக இருந்தது. பொ.வேல்சாமி, இக்கட்டுரையாளருடனான அலைபேசி உரையாடலில் (05.10.2015,10:30 AM) ஐரோப்பியரின் வருகைக்கு முந்தைய பிராமண, வேளாளர்களின் முரண்பாடுகளைப் “புருஷன் பொண்டாட்டிச் சண்ட மாதிரி” என வருணித்தார்.

8.0 நான்மறை-சுருதி-மனு பற்றிய கருத்தாக்கங்கள்

பிராமண, வேளாளர்களுக்கு இடையில் அதிகாரப் போட்டி இருந்தாலும், அடித்தட்டு மக்களை நூதனமான முறையில் அடிமைப்படுத்துவதற்காகப் பிராமணர்கள் உண்டாக்கி வைத்திருந்த கருத்தியல்களை வேளாளர்கள் ஒதுக்காமல் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர் (இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களும் இவற்றைப் போதுமான அளவு பயன்படுத்திக்கொண்டமை இங்கு நினைவுகூரத் தக்கது). அதற்கான சான்றுகள் ஏரெழுபதிற்குள்ளேயே காணப்படுகின்றன. அலகிலா மறை விளங்கும் (ஏர்.20:1), மெய்வரம்பா நின்ற வேதநூல் (ஏர்.23:1), மெய்ப்பாங்குபடக் கிடந்த வேதநூல் (ஏர்.34:1), சீர்வளரும் மறைவளரும் (ஏர்.38:1), எழுதொணா மறை விளங்கும் (42:1), அருமறையின் ஆகமத்தின், திறங்காணும் (ஏர்.50:1,2) நிறைக்குரிய அந்தணர்கள் நெறிபரவ மனு விளங்க (ஏர்.பாயிரம்2:1), தொழுகுலத்தோர், துங்கமக மனு துலங்கிட (ஏர்.பாயிரம்3:2,3), மனுவிளங்கும் (ஏர்.20:3), பேரான மனுநீதி பிறழாது விளங்குவதும் (ஏர்.53:2), செகதலத்துக்கு, ஊற்றங்கொள் மனுநெறியை உண்டாக்கி வளர்க்கும் (ஏர்.65:2,3), மறை மயங்காது ஒருநாளும் மனு மயங்காது உலகத்தின் முறை மயங்காது (ஏர்.28:3,4) என்னும் தொடர்கள் நான்மறை, ஆகமம், மனுதர்மம் போன்றவற்றின் சிறப்புகளை உணர்த்துகின்றன.

உழவுத்தொழிலைப் பாவச்செயலாக எண்ணும் பிராமணக் கருத்தியல் மனுதர்ம சாஸ்திர ஸ்லோகத்தின்வழி முன்னர் எடுத்துரைக்கப்பட்டது. அக்கருத்தியல், வேளாளர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை,

அடுத்திறக்கிப் பெருங்கூடை யளவுபட வேயெருவை

கொடுத்திறக்கி நிலமகளைக் கும்பிட்டு வணங்காரேற்

படுத்திறக்கித் திரிவார்தம் பழிமறுக்க மாட்டாரே (ஏர்.24)
என்னும் பாடல் விளக்குகின்றது. அதாவது, நிலத்தைக் கலப்பையால் கிழித்துப் புண்படுத்தியதாலான பழிச்செயலிற்குரிய கழுவாயே எருவிடும் செயலெனக் கூறப்படுகிறது. நிலத்தில் உழைப்பைச் செலுத்தாமல் தப்பித்துக்கொள்ளும் பார்ப்பனர்களுடனான கூட்டுச் சேர்க்கை,  வேளாளர்களையும் எந்த அளவிற்குப் பாதித்துள்ளது என்பதற்கு இஃதொரு சான்று.

9.0 உழுதுண்போரும் உழுவித்து உண்போரும்

            தொடக்க காலத்திலிருந்தே பிராமணர்கள், நிலத்தில் இறங்கி வேலை செய்தது கிடையாது. ஆனால், வேளாளர்களின்நிலை வேறுவகையானது. அதாவது, குறைந்த அளவிலான நிலத்தைப் பெற்றிருந்தபொழுது தாங்களே நிலத்தில் இறங்கி வியர்வை சிந்தி வேலை செய்து வந்தனர். பெரும்பரப்பிலான நிலங்களை உடைமையாக/நிருவகிக்கும் உரிமையைப் பெற்ற பின்னர், வேளாளர்களில் ஒரு பிரிவினர் உடலுழைப்பில் இருந்து விலகிக்கொண்டனர். பார்ப்பனர்களைப் போல அலுங்காமல் வாழவும் பழகிக்கொண்டனர். அதே வேளையில் நிலமில்லாத வேளாளர்களும் பிற விளிம்புநிலை சாதியினரும் நிலங்களில் கடுமையாக உழைத்தனர். அவர்களின் உழைப்புப் பெரிதும் சுரண்டப்பட்டது; உரிமைகள் மறுக்கப்பட்டன. இப்படி வேளாண் குடிகளுக்கு உள்ளேயே ஏற்றத்தாழ்வான சமூக நிலைகள் இருந்து வந்ததை நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய (பொருள்.29,30)  உரைக்குறிப்புகள் எடுத்துரைக்கின்றன.

உழுதுண்போர், உழுவித்து உண்போர் என வேளாளர்கள் இருவகைப்படுவதையும், அவற்றுள் உழுவித்து உண்போர் உயர்ந்த வேளாளர் என்பதையும் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார்(மேலது).  அவ்வாறு உழுவித்து உண்போராகிய வேளாளர்களே புறநானூறு(35), பதிற்றுப்பத்து (13) போன்ற இலக்கியங்கள் காட்டும் ‘குடிபுறந்தருநர்’ எனவும் கூறுகின்றார். சோழர் காலத்தில் பெருங்குடி வேளாளர்கள் வாழ்ந்த பல ஊர்களையும் பெற்ற சிறப்புகளையும் கூட நச்சினார்க்கினியர்,

அவருள்(வேளாளருள்) உழுவித்துண்போர் மண்டிலமாக்களுந் தண்டத்தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும் அழுந்தூரும் நாங்கூரும் நாவூரும் ஆலஞ்சேரியும் பெருஞ்சிக்கலும்  வல்லமுங் கிழாரும் முதலிய பதியிற்றோன்றி வேளெனவும் அரசெனவும் உரிமை யெய்தினோரும், பாண்டிநாட்டுக் காவிதிப்பட்டமெய்தினோரும், குறுமுடிக் குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடைவேந்தர்க்கு மகட்கொடைக்கு உரிய வேளாளராகுப.

என விரிவாகப் பேசுகிறார். ஆக, அக்காலத்தில் இருவகை வேளாளர்கள் வாழ்ந்திருந்த நிலையில் ‘ஏரெழுபது’ எந்த வகையினரை மையப்படுத்துகிற நூல் என்பதை அறிய வேண்டும். பொதுவாக, ஏரெழுபதில் வேளாளர்களின் குலப்பெருமை, பிராமணர்களுடன் பெருமளவு ஒப்புறழ்ந்து பேசப்பட்டுள்ளதால், இஃது அவர்களுடன் சம உரிமைப்போட்டியாளர்களான உழுவித்துண்ணும் பெருங்குடி வேளாளர்களை மையப்படுத்தியதுதான் என எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ஆயினும், அதற்குரிய வலுவான சான்று ஏதேனும் ஏரெழுபதுள் உள்ளதா என ஆராய்ந்து பார்க்கும்பொழுது ஒரே ஓர் இடத்தில் மட்டும்,

நாவலோ நாவலென நாடறிய முறையிட்ட

ஏவலோர் போர்க்களத்தில் எதிர்நிற்பர்
என்னும் பகுதி ஏரெழுபதுள்(59:1-2) இடம்பெற்றுள்ளது. அதாவது, அறுவடைப்பணி முடிந்ததும் அதில் உழைப்பைச் செலுத்திய பெருமக்கள், கூலியைப் பெறுவதற்காகக் களத்தில், நிலக்கிழார்களின் முன்னால் நின்றுகொண்டிருப்பர் என்னும் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு உழைக்கும் மக்கள், ‘ஏவலோர்’ எனக் குறிக்கப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது. அதாவது, நிலவுடைமையாளர்களுக்கு ஏவல் பணிகளைச் செய்து முடிப்போர் என்னும் பொருளில் அச்சொல் கையாளப்பட்டள்ளது. அதனால் ஏரெழுபது, உழுவித்து உண்ணும் உயர்குடி வேளாளர்களை மையப்படுத்துகிற நூல் என்பது தெளிவாகிறது.

10.0 ஏரெழுபதும் பள்ளு இலக்கியங்களும்

ஏரெழுபதிற்குப் பிறகு உழவுத்தொழிலை மையப்படுத்தி எழுந்த இலக்கிய வகையாகப் பள்ளு இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றுள் பேசப்பட்டுள்ள வேளாண் செய்திகளை ஏரெழுபதின் செய்திகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தவிர்க்க முடியாதது. அவ்வாறு பார்க்கும்பொழுது, ஏரெழுபதை விடப் பள்ளு இலக்கியங்கள் பல நுணுக்கமான வேளாண் தரவுகளைப் பதிவுசெய்துள்ளன. குறிப்பாக, வயல்களின் வகை, நெல் வகை, மாட்டு வகை, ஏர்க்கால் வகை, கலப்பை,மேழி,நுகம் வகை, மீன் வகை போன்றவற்றைச் சொல்ல முடியும். இவ்வாறு பள்ளு இலக்கியங்கள் மிக நுணுக்கமாகப் பேசுவதற்குக் காரணம், அவை உழைக்கும் மக்கள் பிரிவைச் சார்ந்த பள்ளர்களின் நோக்குநிலையில் இருந்து எழுதப்பட்டுள்ளதே ஆகும். அதாவது உழவுத்தொழிலில் பெருங்குடி வேளாளர்களை விடப் பள்ளர்கள் தேர்ந்த பட்டறிவும்

திறனும் பெற்றிருந்தார்கள் என்பதைப் பள்ளு இலக்கியங்கள் உணர்த்துகின்றன. ஆயினும் அவர்கள் சமூக ஒடுக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதை,

உற்பத்திக்கு உரிய விவரங்கள் அனைத்தும் தெரிந்தும் பள்ளனார் வயல் வேலைகளைக் கூலிக்குச் செய்பவராக உள்ளார். உற்பத்திக் கருவிகள் அவரிடம் உடமையாக இப்போது இல்லை. உற்பத்திக் கருவிகளை(மேழி,கலப்பை,நிலம்) அவரிடமிருந்து பிற ஆதிக்க, அதிகார வகுப்பினர் பறித்துச் சென்றனர். நிலம், உற்பத்திக் கருவிகள் அனைத்தையும் இழந்தநிலையில் பள்ளர்கள் இப்போது பண்ணைத் தொழிலாளர்களாக ஆனார்கள். அவைகளைக் கைக்கொண்டவர்கள், உடைமையாளர்களாக, ஆதிக்கம் செலுத்தும் அதிகார  வர்க்கத்தினராக ஆனார்கள் என்னும் வரலாற்றுண்மையைப் பள்ளு நூற்கள் பதிவு செய்துள்ளன.
எனப் பள்ளு இலக்கியங்கள் குறித்து ஆராய்ந்த சு.வேங்கடராமன் குறிப்பிடுகின்றார் (1998:95). பள்ளர்கள் மட்டுமல்ல உடலுழைப்பைச் செலுத்தி வேளாண் தொழிலை நேர்த்தியாகச் செய்யத் தெரிந்தும், சொந்த நிலமற்றிருந்த எல்லாப் பிரிவினரும் அத்தகைய ஒடுக்குமுறைக்கு உள்ளாகிப் பண்ணையடிமைகளாகவே துன்பப்பட்டுள்ளனர்.

தொகுப்புரை

.1.ஏரெழுபதின் பாடல் எண்ணிக்கையிலேயே சிக்கல் உள்ளது. அதன் பாயிரப் பகுதியில்       இடம்பெறும்  செய்தியொன்று நூற்செய்தியிலிருந்து வேறுபட்டுள்ளது.

  2.ஏரெழுபதின் நாற்பது பாடல்களில் வேளாளர்களின் பெருமை, பிராமணர்களுடனும் அரசருடனும் ஒப்பிட்டு உயர்வாகப் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக, பிராமணர்களின் தொழிலை விட, வேளாளர்களின் தொழில் மேலானது என்னும் கருத்து ஏரெழுபதுள் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 3.விவசாயத்தைப் பாவத்திற்குரிய தொழிலாக எண்ணி, வேதம் ஓதுதல், வேள்வி செய்தல்  ஆகிய தொழில்களை மட்டும் செய்துவந்த பிராமணர்கள், சோழர் காலத்தில் பெருங்கோயில் நிருவாகிகளாகவும், நில மேலாண்மையாளர்களாகவும், நிலக்கொடை பெறுவோராகவும்  மாறினர்.

 4.பிராமணர்கள், நில மேலாண்மை உரிமைகளைப் பெற்றதைக் கண்டு  வேளாளர்கள் பொறாமை கொண்டனர். வேளாளர்கள், தங்களுக்குள் ஒரு கூட்டிணைவை ஏற்படுத்திக் கொண்டனர். பிராமணர்களுக்கு நிகரான சமய அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் வேளாளர்கள் முனைப்புக் காட்டினர். அதனால், சில பூசல்கள் விளைந்தன.

 5.பிராமண, வேளாளர்களுக்கு இடையில் சில முரண்பாடுகள் எழுந்தாலும், அவர்கள் பிளவுபட்டுப் போகாமல் சமரசப்படுத்திக்கொண்டு, அடித்தட்டு மக்களைச் சுரண்டுவதில் பெருவேந்தர்களுக்குக் கைத்தடிகளாகச் செயல்பட்டுள்ளனர்.

 6.ஏரெழுபது, உழுவித்து உண்ணும் பெருங்குடி வேளாளர்களின் குரலாக ஒலிக்கும் இலக்கியமாகவே விளங்குகிறது. 
7.ஏரெழுபதை விடப் பள்ளு இலக்கியங்கள், பல நுணுக்கமான தரவுகளைப் பதிவு செய்துள்ளன. அவை உழைக்கும் மக்கள் நோக்குநிலையில் இருந்து செய்யப்பட்டுள்ளன.

துணையன்கள்

அருணாசலம், மு., 2005, தமிழ் இலக்கிய வரலாறு(தொகுதி-6), சென்னை: தி பார்க்கர்.

ஆசிரியர் குழு, 1958, பாட்டும் தொகையும், சென்னை: எஸ்.ராஜம்.

ஆறுமுக நாவலர் (ப.ஆ.), அக்ஷய ஆண்டு, ஏரெழுபது, திருக்கைவழக்கம், சென்னப்பட்டணம்:

வித்தியாநுபாலனயந்திரசாலை.

கணேசையர் (ப.ஆ.), 2007,தொல்காப்பியம் பொருளதிகார மூலமும் நச்சினார்க்கினியருரையும்,

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

கதிர் முருகு (உ.ஆ.), 2007, ஏரெழுபது, சென்னை: சீதை பதிப்பகம்.

கதிர் முருகு (உ.ஆ.), 2007, சிலை எழுபது, சென்னை: சீதை பதிப்பகம்.
கதிர் முருகு (உ.ஆ.), 2009, ஈட்டி எழுபது, சென்னை: சாரதா பதிப்பகம்.
காளிமுத்து,ஏ.கே., 2012, தமிழகத்தில் காலனியமும் வேளாண்குடிகளும், சென்னை: பாரதி 
            புத்தகாலயம்.
கேசவன், கோ., 2001, மண்ணும் மனித உறவுகளும், விழுப்புரம்: சரவணபாலு பதிப்பகம்.
கைலாசபதி, க., 1999, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், சென்னை: குமரன் பப்ளிஷர்ஸ்.
கைலாசபதி, க., 2007, அடியும் முடியும், சென்னை: குமரன் பப்ளிஷர்ஸ்.
கௌமாரீஸ்வரி, எஸ்.(ப.ஆ.), 2006, தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணர் உரை,
சென்னை: சாரதா பதிப்பகம்.
சிங்காரவேலு முதலியார், ஸ்ரீமுக ஆண்டு, அபிதான சிந்தாமணி, சென்னை: குமாரசாமி நாயுடு
கம்பெனி.
திருலோக சீதாராம் (மொ.ஆ.), 2006, மனுதர்ம சாஸ்திரம், சென்னை:அலைகள் வெளியீட்டகம்.
பசுபதி, ம.வே.(ப.ஆ.), 2010, செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள், தஞ்சாவூர்: தமிழ்ப்
பல்கலைக் கழகம்.
பத்மாவதி, ஆ., 2003, சோழர் ஆட்சியில் அரசும் மதமும், சென்னை: குமரன் பப்ளிஷர்ஸ்.
பேரின்பன், தேவ., 2006, தமிழகத்தின் பொருளாதார வரலாறு, சென்னை: நியூ செஞ்சுரி புக்
ஹவுஸ்.
மறைமலை அடிகள், 1997, வேளாளர் நாகரிகம், சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
ராசுகுமார், மே.து., 2004, சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்,
சென்னை:மக்கள் வெளியீடு
ரொமிலா தாப்பர் (தமிழில் : நா.வானமாமலை), 2008, வரலாறும் வக்கிரங்களும், சென்னை:
அலைகள் வெளியீட்டகம்.
வேங்கடராமன், சு., 1998, பள்ளு இலக்கியங்களில் மள்ளர் மரபுகள், கோயம்முத்தூர்:
தேவேந்திர மன்றம்.
வேல்சாமி, பொ., 2010, பொய்யும் வழுவும், நாகர்கோயில்: காலச்சுவடு பதிப்பகம்.
ஜெகதீசன், ஆ., 2007, தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டியல் கூறுகள், சென்னை: ஸ்நேகா.
 
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக